×

திருவண்ணாமலையில் சிறுதானிய உணவு திருவிழா 25 நிமிடத்தில் 347 சிறுதானிய உணவு தயாரித்து உலக சாதனை முயற்சி

*அங்கீகார சான்று வழங்கப்பட்டது

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழாவில், 25 நிமிடங்களில் 347 சிறுதானிய உணவுகளை சமைத்து உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலை திறந்தவெளி திடலில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் சிறுதானிய உணவுத் திருவிழா நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தார். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில், சிறுதானிய உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்து, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது:

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. சிறுதானியத்தை பயன்படுத்தி, இந்த தலைமுறை விரும்பும் வகையிலான உணவுகளை தயாரிக்க உணவு நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, இளையதலைமுறையினர், மாணவர்கள் சிறுதானிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில், சிறு தானிய உணவு வகைகள் தயாரித்து உலக சாதனை முயற்சியை மேற்கொண்டனர். அதன்படி, 51 பேர் கொண்ட குழுவினர், 25 நிமிடங்களில் தினை, சாமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை பயன்படுத்தி 347 சிறுதானிய உணவுகளை சமைத்து சாதனை படைத்தனர்.
அதையொட்டி, கலெக்டர் முருகேஷ் தலைமையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மீனாம்பிகை, வட்டார திட்ட அலுவலர் சரண்யா மற்றும் 51 அங்கன்வாடி ஊழியர்களின் இந்த முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, டிரையும்ப் வேல்டு ரெக்கார்டு நிறுவனம் அங்கீகாரச் சான்றினை வழங்கியது.

அதேபோல், கடந்த மாதம் நடந்த தீபத்திருவிழாவின் போது கிரிவலப்பாதையில் 246 அன்னதான கூடம் அமைத்து சுமார் 23 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் அன்னதானம் வழங்கியதை முறைப்படுத்தியதற்காகவும், 78 இடங்களில் சிறுதானிய உணவு வழங்குவதற்கான நடவடடிக்கையை எடுத்ததற்காகவும் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு உலக சாதனை முயற்சிக்கான அங்கீகாரச்சான்று வழங்கப்பட்டது.

மேலும், தனியார் உணவு நிறுவனத்தின் சார்பில் 15 அடி உயரத்தில் இந்திய வரைப்படம் உருவாக்கி அந்தந்த மாநிலத்தில் உற்பத்தியாகும் சிறுதானியங்களை பயன்படுத்தி இந்திய வரைப்படம் உருவாக்கியதையும் உலக சாதனை முயற்சியாக அங்கீகரித்து அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டது. அங்கீகாரச் சான்றுகளை, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ் ஆகியோர் வழங்கினர்.

மேலும், சித்த மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான்அகமத் இஸ்மாயில், டாக்டர் சாய்பிரசன்னா, தில்லைவாணன், ப்ரியாநாராயணன் ஆகியோர் சிறுதானியத்தின் நன்மைகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினர். நிகழ்ச்சியில், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் ப.கார்த்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், எஸ்.பன்னீர்செல்வம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாம்பிகை, வட்டார திட்ட அலுவலர் சரண்யா, வேளாண்மை இணை இயக்குநர் ஹரக்குமார், நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில் உள்ளிட்ட பலர் கலந்துகொணடனர்.

The post திருவண்ணாமலையில் சிறுதானிய உணவு திருவிழா 25 நிமிடத்தில் 347 சிறுதானிய உணவு தயாரித்து உலக சாதனை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Small grain food festival ,Tiruvannamalai ,grain food ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...